Thursday, May 10, 2012

தப்பி ஓட்டம்



சரியாத்தானே இருந்துச்சு..என்ன ஆச்சு..?!

ட்ட்டப்ப்..ட்ட்டப்ப்.. மீண்டும் இரண்டுமுறை அவர் அதை இடதும் வலதுமாய் தட்டித்தட்டிப் பார்த்தார். அது வேலைநிறுத்தத்தில் இருக்கிறதா? அல்லது விருப்ப ஓய்வே பெற்றுவிட்டதா? என்று யோசித்துகொண்டே மீண்டும் தட்டி தட்டி பார்த்தார்..ம்ஹீம்..ஒன்றும் பிரயோஜனமில்லை..

அந்த மீட்டரில் முள் சரியாக நூறில் அப்படியே நின்றபடி இருந்தது. நூறுக்கு மேலும் சேர்த்திருக்க வேண்டும் போல, அந்த அளவு அது அப்படியே நூறாம் எண்ணோடு பசைபோட்டு ஒட்டிகொண்டது. ஏனோ இதை பார்த்தவுடன், காலை வாக்கிங் முடித்து வரும்பொழுது, பள்ளிக்கு செல்லமாட்டேன் என்று அம்மாவின் கால்களை இறுக்கிப்பிடித்துகொண்டிருந்த பெண்குழந்தை நினைவுக்கு வந்தது அவருக்கு.

சரி… மற்ற மீட்டர்களை சரி பார்ப்போம் என்று மற்ற மீட்டர்களை நோக்கி நடந்தார், அந்த சுவற்றில் வரிசையாக இருந்த பல்வேறு மீட்டர்களை பொதுவாக கவனித்தார்.எல்லாமே கொஞ்சம் நகர்ந்தவண்ணமாய் தான் இருந்தது. மயிலின் பைத்தியக்காரத்தனம்- 14 சதவிகிதம், கடல் நண்டின் பைத்தியக்காரத்தனம்- 19 சதவிகிதம், கரடியின் பைத்தியக்காரத்தனம்- 21 சதவிகிதம், நரி- 23 சதவிகிதம்..

எல்லாம் சரியாகத்தான் இருந்தது.. அப்படியென்றால்…அப்படியென்றால்.. இந்த மீட்டரும் சரியாகத்தான் இருக்கவேண்டும்..சரிக்கும் மேலாக, நூறுக்கும் மேலாக அது சரியாகத்தான் இருக்கமுடியும்..அப்பொழுது இந்த மீட்டரின் எதுவும் பிரச்சனை இல்லை..

பிரச்சனை..மனிதர்களிடம்தான்..

அவர் அதிர்ந்து போனார்..இதை எப்படி சமாளிப்பது. பகல் நெருங்க நெருங்க.. இன்னும் அந்த மீட்டர் வேகமாய் துடித்துகொண்டிருந்தது.. இன்னும் நேரம் ஆக ஆக, அந்த மீட்டரின் முள் சூட்டில் சிவந்தே விட்டது.. அதிர்ச்சியில் அவரும் மீட்டரைப்போலவே துடித்துகொண்டிருந்தார்.. ஒருவாறாய் ஒரு முடிவுக்கு வந்தார்..

”இனி இங்கு இருக்கமுடியாது.. இது சாத்தியப்படாத ஒன்று, நம் இருப்பு இவர்களுக்கு எளக்காரமாகிவிட்டது, ஒருவகையில் நாம் தான் இந்த அளவு இது வளர்ந்ததற்கு காரணம்கூட. இனியும் இது தொடரக்கூடாது” என்று முடிவுக்கு வந்தார்.

உடனடியாக அவரின் உடைகளை பைக்குள் திணித்துகொண்டார்.அவரின் அறைக்கதவை சாத்துவதற்கு முன் ஒருமுறை அந்த மீட்டரை பார்த்தார், இன்னும் சிவந்து க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர்ர்ர் என அதிபயங்கர வேகத்தில் துடித்துகொண்டிருந்தது. மிரட்சியுடன் கதவைப்பூட்டிவிட்டு நடந்தார், காரில் ஏறினார், சில பில்லியன் கிலோமீட்டர்களுக்கு அப்பால் உள்ள கிரகத்தை குறிப்பிட்டார். ஓய்வாக அவர் சாய்ந்து அமர, அவரைத் தூக்கிகொண்டு அந்த கார் விண்வெளிக்கு விருட்டென கிளம்பியது.


..பூமியில், ஏதோ ஒரு வீட்டு டி.வியில் அன்றிரவு..

…..வானத்தில் தீடீரென பிரகாசித்து மறைந்த பொருள்,.. மேலும் பல முக்கிய செய்திகள், விளம்பர இடைவேளைக்கு பிறகு..!!