Sunday, January 8, 2012

மக்களை பூமிக்கு கொண்டுவர சில வழிகள்


பொதுவாக நாம் சந்திக்கும் மக்கள் அனைவரும் எந்நேரமும் பூமியிலேயே இருப்பதில்லை..
சிலர் செவ்வாயிலும், சிலர் வெள்ளியிலும், சிலர் வியாழனிலும் இருக்கிறார்கள்..
எதோ ஒரு சிந்தனையில் எதோ இயந்திரம்போல் வேலை செய்துகொண்டிருக்கும் நம் அன்பு மக்களை மீண்டும் பூமிக்கு கொண்டுவருவது நம் கடமையல்லவா..அதற்குதான் சில வழிகளை யோசித்திருக்கிறேன்..

1. சாலை போக்குவரத்து அதிகாரி:
சிக்னலில் அவர் அருகே நிற்க நேர்ந்தால்..
“ஏம்பா, நானும் காலைல இருந்து பார்த்துகிட்டு இருக்கேன்.. நடுரோட்டுல நின்னு போற வர்ற பொண்ணுங்களுக்கு கைகாட்டிகிட்டு இருக்க..ஒருத்தனும் ஏன்னு கேக்க மாட்டேங்கறான்.. எந்த ஊருப்பா நீயி? பஸ்ஸ விட்டுட்டியா? காசு எதுனா வேணுமா? “ என்று நலம் விசாரிக்கலாம்.

2. நகை கடை ஊழியர்:
வேகமாக உள்ளே சென்று ஒரு “நல்ல” ஊழியராய் பார்த்து “ ரெண்டு கிலோ தங்கம், ஒரு கிலோ வெள்ளி, அரை கிலோ ப்ளாட்டினம், அப்படியே கலப்படம் பண்ண கொஞ்சம் கொசுறு செம்பு பார்சல் பண்ணுப்பா.. அப்புறம், நெக்லஸ் முப்பது, அட்டிகை இருபத்தஞ்சு, தங்க மோதிரம் ஒரு நாப்பது..அப்படியே முத்து முந்நூறு..ம்ம்..இப்போதைக்கு இவ்ளோதான்.. என்னப்பா முழிக்கிற..எழுதிக்கோப்பா..”

அப்படியே அங்கே கல்லாவில் அமர்ந்திருப்பவரிடம் சென்று “ தம்பி, லிஸ்ட் குடுத்துட்டேன்..சாயங்காலம் சரக்கெல்லாம் வீட்டுக்கு வந்தாகணும்..இல்லைன்னா அப்புறம் பார்த்துக்க” என்று மிரட்டிவிட்டு வரலாம்.

3. வங்கி பணியாளர்:
வெகு நேரம் ஒரு க்யூவில் நில்லுங்கள்.. பிறகு பக்கத்து க்யூவிற்கு மாறிவிடுங்கள், பிறகு மீண்டும் அடுத்த க்யூவிற்கு மாறிகொள்ளுங்கள்..வெகு நேரம் நின்றபின் உங்கள் முறை வந்தவுடன் “5 ரூபாய்க்கு சில்லரை இருக்கா?” என்று அவசரமாய் கேளுங்கள். உங்களை அவர்கள் வாழ்க்கைக்கும் மறக்கமாட்டார்.

4. கோவில் பூசாரி:
உங்கள் பேருக்கு அர்ச்சனை செய்துவிட்டு அவர் வெளியே வந்ததும்.. “அய்யரே, ஒன்னுமே புரியலை.. என்னய்யா மந்திரம் படிச்சீரு.. ஒழுங்கா புரியற மாதிரி இன்னொரு முறை சொல்லும்..போங்க..”  பலமுறை அவரை விரட்டுங்கள். அல்லது.
”நீயும்தான் தினமும் சாமிகிட்ட வேண்டுற, சாமி பக்கத்துலயே இருக்க.. ஆனா என்ன புண்ணியம்? ஒரு சட்டை கூட வாங்க வழியில்லை.. என்னை பார்த்தியா? எப்பவாச்சும் தான் வரேன்..ஒரு 2 நிமிஷம் தான் நிக்கறேன்..சட்டை பார்த்தீல்ல..500 ரூபா.. அதுக்கெல்லாம் குடுப்பணை வேணும்யா..” என்று சொல்லி கடுப்பேத்தலாம்.

5. ஹாஸ்பிடஸ் ரிஷப்ஷனிஸ்ட்:
வேகமாக அவரை அணுகுங்கள், மிக சீரியஸாய்
”இந்த 302ம் ரூம்ல இருக்கற பேஷண்ட் எப்போ சாவார்னு கொஞ்சம் பார்த்து சொல்ல முடியுமா?” என்று கேட்கலாம்.

6. கிஃப்ட் ஷாப் வைத்திருப்பவர்:
நேராக உள்ளே போய் “எடுங்க..எடுங்க..டைம் ஆச்சு..”
அவர் பேந்த பேந்த முழிப்பார்.
“அலோ, கிஃப்ட எடுங்க, என் கிஃப்ட எனக்கு குடுக்க இவ்ளோ யோசிக்கிறீங்க..”
என்று அவரை முழிபிதுங்க வைக்கலாம்.

7. மீன் விற்கும் கடை:
திடீரென சத்தமாக “ஏம்பா. திமிங்கலம் ரெண்டு, டால்பின் ஒண்ணு போடுப்பா, நேரமாச்சு.. அப்படியே ஆக்டோபஸ் அரைகிலோ பார்ஸல் பண்ணிடுஎ ..அப்படியெ கொசுறா கொஞ்சம் விண்மீன் போட்டுடு” என்று சொல்லலாம்.

8. ஜெராக்ஸ் கடை:

நீங்கள் உங்கள் நண்பரையும் இதில் கூட அழைத்துகொள்ளலாம்.
”ஏம்பா, வீட்ல ஏகப்பட்ட வேலை.. ஒரே ஆளா சமாளிக்க முடியலை.. என்ன ரெண்டு காப்பி ஜெராக்ஸ் எடு, இவரு என் நண்பரு, அப்படியே இவரையும் ஒரு காப்பி ஜெராக்ஸ் போட்டுடு..எவ்ளோ ஆகும்?” என்று பவ்யமாக கேட்கலாம்.

9. திருமண தகவல் மையம்:
நேராக உள்ளே சென்று, ”எனக்கு தெரிஞ்சு பையன் ஒருத்தன் இருக்கான், செவ்வாய் கிரகத்துல மணல் அள்ளுற வேலை, நல்ல் சம்பளம், வருஷம் ஒருக்கா ஒரு பத்து நிமிஷம் டான்னு வீட்டுக்கு வந்துடுவான், நல்ல உயரம்.. ஒரு 17 அடி இருக்கும், படிப்பு கம்மிதான்.. ஆள் ஆனா பூசினாப்படி..ஒரு லாரி சைஸ் இருப்பான்.. நல்ல செவப்பா இருப்பான்.. பொண்ணு எதுனா இருக்கா?” என்று கேட்கலாம்.

10. லேடிஸ் ஹாஸ்டல்:

அங்கே மேனேஜரிடம், அறிவியல் பூர்வமான சொல்லணும்னா ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு ஆண் இருக்கு, ஒவ்வொரு ஆணுக்குள் ஒரு பெண் இருக்கு. இப்போ எனக்குள்ளயும் ஒரு பெண் இருக்கு, அதனால என்னை இங்கெ தங்க அனுமதிக்கணும், இல்லைன்னா இங்க இருக்குற எல்லா பெண்களுக்குள்ளும் ஒரு ஆண் இருக்கு, எனவே எல்லாரையும் உடனே வெளியேற்றியே ஆகணும். ஏன்னா இது லேடிஸ் ஹாஸ்டல்” என்று மிரட்டல் விடுக்கலாம்..

11. ஹோட்டல் சர்வர்:

டிப்ஸ் கேட்கும்பொழுது:
”முதலில் நீ நன்றாக வேகமாக நடக்க பழகவேண்டும், அப்போதுதான் கஸ்டமருக்கு உன் மீது மதிப்பு வரும். இரண்டாவது, நீ பல்விளக்காது வரவே கூடாது. உன்னால் என் நண்பர் இரண்டுமுறை மயங்கிவிழுந்துவிட்டார். மூன்றாவது, மாதமொரு தடவை எப்பாடுப்பட்டாவது குளித்துவிட வேண்டும்.. எனக்கென்னவோ உன்னால்தான் இந்த ஹோட்டலில் ஒரு கெட்ட வாடை வருகிறதென்று தோன்றுகிறது”
 என்று இப்படி நல்ல நல்ல டிப்ஸ் கொடுக்கலாம். நிச்சயம் பயன்படும்.
மேற்சொன்ன ஐடியாக்களை செய்து பார்க்கும்பொழுது, ஏச்சுக்களோ, வசவுகளோ வாங்க நேர்ந்தால் அஞ்ச வேண்டாம். ஏனெனில், உங்களுக்கு அவர்கள் புத்திசாலித்தனமாக பதிலளிக்க முடியாமல் இருப்பது அவர்களது பிரச்சனை. நமக்கு அவர்களை பூமிக்கு கொண்டுவந்தாயிற்று.. அவ்வளவுதான். :)

Thursday, January 5, 2012

டாக்டரை கொல்ல முடியுமா? - ஒரு செய்தி சார்ந்த சிந்தனை

இது போன்ற ஒரு முட்டாள்தனமான ஒரு கூட்டத்தை  நான் பார்த்ததே இல்லை- இதுதான் நேற்று அந்த டாக்டர் பெண்மணி ஒருவர் இறந்துவிட்டார், நடவடிக்கை  எடுக்க கோரி டாக்டர்கள் போராட்டம் என்று செய்தி வந்த போது, என் மனதில் தோன்றிய எண்ணம்.
ஏன் அப்படி ஒரு எண்ணம் வந்தது என்கிறீர்களா? சொல்கிறேன்.

 முதலாவதாக
டாக்டரை  யாராலும் கொல்ல முடியாது. ஏனெனில் டாக்டர் என்பது ஒரு கற்பனை பட்டம். உங்களை நல்லவர், வல்லவர் என்று சொல்வது போல (நீங்கள் எவ்வளவு மோசம் என்று அவரவர் மனசிற்கு தெரியும்..அது வேறு விஷயம்). ஒரு பட்டத்தை சுமந்து திரிந்த ஒரு பெண்ணைத்தான் யாரோ ஒருவன் கொன்றிருக்கிறானே தவிர.. டாக்டரை கொல்ல முடியாது. அது ஒரு Abstract Noun.

இரண்டாவதாக,
டாக்டரை கொல்லவேண்டும் என்று அவன் எவ்வளவு முயற்சிகள் செய்தாலும் அவனால் கொல்லமுடியாது. கடவுளை கொல்ல முடியுமா? முடியாது. ஏனெனில் அது ஒரு மனகற்பனை, அதேதான் இங்கும். டாக்டர் என்பதும் உங்களுக்கு பிறரால் கொடுக்கப்பட்ட ஒரு கற்பனை அங்கீகாரம். அவ்வளவே.. எனவே...அந்த கொலையாளி கொன்றது ஒரு பெண்ணைத்தானே தவிர.. டாக்டரை அல்ல.

மூன்றாவதாக,
அப்படி கொன்றதற்கு அவனுக்கு எனது நன்றிகள். இப்போது இவர்கள் போராடுவதன் மூலம் நான் டாக்டருக்கே  படித்திருந்தாலும் முட்டாள்தான், சுயசிந்தனை என்பதே இல்லாமல்தான் நானும் வாழ்கிறென் என்று இத்தனைப்பேர் தங்களை தாங்களே வெளிச்சம் போட்டு காட்டிகொண்டனர்.

நான்காவதாக,
இப்போது டாக்டர்களுக்கு ஒரே சந்தோஷமாக இருக்கும். இதோ, தங்களாலும் கொஞ்சம் சமுதாயம் ஸ்தம்பிக்கத்தான் செய்கிறது. ஹைய்யா ஜாலி என்று உள்ளுக்குள் ஒரே குஷியாகத்தான் இருக்கும். எதற்கெடுத்தாலும் போராட்டம் என்று மூன்றாம்தர அரசியல்வாதிகள்(அரசியலே மூன்றாம்தரம் தான்) போல் இவர்கள் நடந்துகொள்கிறார்கள் என்பதுதான் என் மனவேதனை.

ஐந்தாவதாக,
யாரோ ஒரு அம்மையார் இறந்ததற்காக போராடுகிறேன் பேர்வழி என்று போய், இருக்கும் நோயாளிகள் இறந்துபோனால் யார் பொறுப்பு? இப்போது அந்த கொலையாளியை விட இவர்கள் கீழே  சென்றுவிட்டனர். அவன் பொறுப்பாய் அவன் கடமையை செய்துவிட்டான். கொல்வது கடமை, கொன்றாயிற்று. ஆனால் காப்பாற்றும் கடமையிலிருந்து நழுவ சந்தர்ப்பம் தேடும் இவர்களை என்ன செய்யலாம்?

ஆறாவதாக,
ஐ.சி.யூ. விற்கு மட்டும் வந்து பார்ப்போம் என்கிறார் ஒருவர். சாதாரண நோயாளிகளை, மருத்தவம் பார்த்து சரிசெய்யாதுவிட்டால், ஐ.சி.யூ. விற்கு தானே  வந்தாக வேண்டும். இதில் என்ன கருணை வள்ளல் போல் ஐ.சி.யூ. விற்கு மட்டும் வருவோம் என்பது.
ஐ.சி.யூ. வில் வைத்துவிட்டால் சிறப்பாக பில்லைத் தீட்ட முடியுமென்பதால், அங்கு மட்டும் Concession-ஆ? சரி புறநோயாளி என்ன பாவம் செய்தான்? பணம் கட்ட வழியில்லாமல், வெளியிலேயே பிணமாய் போனால், கவலை இல்லையா உங்களுக்கு?( அது இருந்தால் ஏன் போராட்டம் அது இது என்று நேரத்தை  வீணடிக்க போகிறீர்கள்?)

..ஒன்று மட்டும் சரியாக புரிகிறது..
இப்போதைய ட்ரெண்ட் போராட்டம்.. பொழுது போகவில்லையா  போராடு, பொட்டி பொட்டியாய் பணம் வேண்டுமா போராடு..
..யப்பா..முடியல..!!

பி.கு: இறந்த அந்த பெண்மணிக்கும், அவர்களின் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.